ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இராணுவ மருத்துவமனையில் துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்றும் குறைந்தது 16 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
400 படுக்கைகள் கொண்ட சர்தார் தாவுத் கான் மருத்துவமனையை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்-கே, பொறுப்பேற்றுள்ளது. இதற்கு முன்னர் பொதுமக்கள் மற்றும் தலிபான் போராளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கும் குறித்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
இந்நிலையில் தாக்குதலை நடத்தியவர்களில் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாகவும், ஒருவரை உயிருடன் பிடித்துள்ளதாகவும் தலிபான் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா துருப்புக்கள் மீளப்பெறப்பட்டதை அடுத்து ஓகஸ்ட் மாதம் நாட்டை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
.
ஓகஸ்ட் மாதம், காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஐஎஸ்-கே நடத்திய குண்டு தாக்குதலில் 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.