அமைச்சு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கமறுத்துள்ளார்.
அவரது சேவைகள் தொடர வேண்டும் என்றும் அது நாட்டுக்கு அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டி ஜனாதிபதி இந்த முடிவை அறிவித்துள்ளார்.
மேலும் புதிய அரசியலமைப்பு மற்றும் அனைத்து சட்டவாக்க செயற்பாடுகளையும் சுயாதீனமாக மேற்கொள்ள எவ்வித தடையும் இருக்காது என்ற உறுதிமொழியையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதி அமைச்சருக்கு வழங்கியுள்ளார்.
ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி செயலணியை அமைத்தமை குறித்து தன்னிடம் ஆலோசிக்கப்படவில்லை என நீதியமைச்சர் அலி சப்ரி கூறியிருந்தார்.
அத்தோடு ஞானசார தேரர் தலைமையில் குறித்த செயலணியை அமைத்து சமயத்தலைவர் ஒருவர் நாட்டின் சட்டங்களை இயற்றுவதா என்ற கேள்வியையும் எழுப்பி இந்த நியமனம் பொருத்தமானது அல்ல என்றும் சுட்டிக்காட்டிருந்தார்.
மேலும் குறித்த செயலணியினால் மக்கள் மத்தியில் வித்தியாசமான அபிப்பிராயம் உள்ளது என்றும் இதில் தமிழ் பேசும் உறுப்பினர் உள்வாங்கப்படாமை குறித்தும் அதிருப்தி வெளியிட்டிருந்த அலி சப்ரி, இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்க திட்டமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.