அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ கைது செய்யப்படமாட்டார் என சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பாக சட்டமா அதிபர் திணைக்களம் இன்று (திங்கட்கிழமை) இதனை அறிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து, கடந்த மாதம் 23 ஆம் திகதி பேராயர் தலைமையில் நடைபெற்ற இணையத்தள மாநாட்டில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக அரச புலனாய்வுப் பணிப்பாளர் சி.ஐ.டியில் முறையிட்டிருந்தார்.
அந்த முறைப்பாட்டை மையப்படுத்தி, 2007 ஆம் ஆண்டு 56 ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பிலான சர்வதேச இணக்கப்பாட்டு சட்டத்தின் 3 (1),(2) ஆம் உறுப்புரைகள் பிரகாரமும், தண்டனை சட்டக் கோவையின் அத்தியாயங்களின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டது.
இந்த விசாரணைகளுக்கமைய வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, முதன் முதலாக கடந்த ஒக்டோபர் 28 ஆம் திகதி முன்னிலையாகுமாறு, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவிற்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசேட விசாரணைப் பிரிவு அறிவித்திருந்தது.
எனினும் தன்னை கைது செய்ய சி.ஐ.டி.யினர் மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க உத்தரவிடக் கோரி, அருட்தந்தை சிறில் காமினி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.