பெலரஸுடனான அதன் கிழக்கு எல்லை ஊடாக புலம்பெயர் மக்கள் நாட்டிற்குள் நுழையும் முயற்சிகளை முறியடித்துள்ளதாக போலந்து அறிவித்துள்ளது.
மேலும் ஆயிரக்கணக்கானோர் முள்கம்பி வேலியை கடற்க முற்பட்ட காணொளி காட்சிகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள போலந்து அரசாங்கம் பிராந்தியத்திற்கு 12,000 துருப்புக்களை அனுப்பியுள்ளது.
பெலரஸ் அரசாங்கம் புலம் பெயர் மக்களை எல்லையை நோக்கி தள்ளுவதாகவும் இது விரோத நடவடிக்கை என்றும் போலந்து குற்றம் சாட்டியுள்ளது.
சமீபத்திய மாதங்களில் பெலரஸில் இருந்து சட்டவிரோதமாக தங்கள் நாடுகளுக்குள் நுழைய முயற்சிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போலந்து, லிதுவேனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தெரிவிக்கின்றன.
பெலரஸின் சர்வாதிகார ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ பொருளாதாரத் தடைகளுக்குப் பழிவாங்கும் வகையில் ஊடுருவலை எளிதாக்கியதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம் சாட்டியுள்ளது.
இதேவேளை பெலரஸுடனான எல்லைகளை போலந்து அரசாங்கம் மூடியுள்ள நிலையில் குளிர்காலத்தில் உணவு மற்றும் குடிநீர் இல்லாத நிலையில் புலம்பெயர் மக்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் எழுப்பப்பட்டுள்ளது.