ஆப்கானிஸ்தான் பெண்கள் தமது உரிமைகளை பயன்படுத்துவதில் வரையறைகள் இருப்பதாக தெரிவித்து தலைநகர் காபூலில் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.
மேலும், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் உட்பட சர்வதேச தரப்பினர் இந்த விடயத்தில் மௌனமாக இருப்பதாகவும் குறிப்பிட்டு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், பெண்கள் பள்ளிவாயில்களுக்கு செல்வதற்கும், பெண்கள் தங்கள் வேலைகளுக்குத் திரும்புவதற்கும் வழி வகுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
‘ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து சர்வதேச சமூகத்தின் மௌனத்திற்கு எதிராக எங்கள் குரலை எழுப்புவதற்கு நாங்கள் இங்கு வந்துள்ளோம்’ என்று போராட்டத்தில் பங்கேற்ற அரிஃபா பாத்திமி கூறினார்.
‘ஆப்கானிஸ்தானின் மக்கள் தொகையில் அரைப்பங்கினர் அகற்றப்பட்டுள்ளனர். நாங்கள் எங்கள் உரிமைகளை இழந்துவிட்டோம். இந்த நிலைமை தொடர்வது ஆபத்தானது ‘ என்று மற்றொரு போராட்டக் காரரான மர்ஜான் அமிரி கூறினார்.
இதேவேளை, பல பெண்கள் உரிமை ஆர்வலர்கள் ஷரியா சட்டத்தின் அடிப்படையில், பெண்களுக்கு கல்வி மற்றும் தொழில் செய்வதற்கான உரிமை உள்ளது என்றும், இது தொடர்பாக சர்வதேச சமூகம் அமைதியாக இருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
‘சர்வதேச சமூகம் தமது நிலைப்பாடுகளை வெளியிட்டு நடவடிக்கை எடுத்தால், பெண்களுக்கு அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பயன்படுத்துவதில் உள்ள வரையறைகளை நீக்க முடியும்’ என் பெண் உரிமை ஆர்வலர் சர்க்கா யாப்தலி கூறினார்.
ஆப்கானிஸ்தானின் சுதந்திர மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்னாள் ஆணையாளர் பெஹேஷ்தா யாகூபி, ‘இஸ்லாமிய எமிரேட் உலகத்துடன் தொடர்புகளை பேணுவதற்கு விரும்பினால், அது பெண்களின் உரிமைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என்றார்.
‘ஆப்கான் அரசாங்கம் உலகத்துடன் தொடர்பு கொள்ள விரும்பினால், அது மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்க கடமைப்பட்டுள்ளது’ என்று யாகூபி கூறினார்.
இஸ்லாமிய சட்டத்தின் கீழ் பெண்களுக்கு கல்வி, வேலை வாய்ப்புகளை வழங்குவதாக இஸ்லாமிய எமிரேட் பலமுறை கூறியிருந்தாலும் காபூலில் தற்போது வரையில் போராட்டங்கள் தொடர்கின்றன.