நிதி அமைச்சர் இல்லாவிட்டாலும் கேள்விகளுக்கு பதிலளிப்போம் என குறிப்பிட்ட இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க எதிர்க்கட்சியினர் எழுப்பிய சில கேள்விகளுக்கு மௌனம் காத்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) 2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கேள்விகளுக்கு பதில் வழங்குவதற்கு நிதி அமைச்சர் சபையில் இல்லை என எதிர்க்கட்சி விமர்சித்தது.
ஆகவே அவரை சபைக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சம்பிரதாய முறைப்படி நிதி அமைச்சர் சபையில் இருக்க வேண்டும் என்றும் லக்ஸ்மன் கிரியெல்ல கேட்டுக்கொண்டார்.
அத்தோடு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் குறித்த கோரிக்கையை முன்வைத்திருந்த நிலையில், நிதி அமைச்சு சார்ந்து கேள்விகளுக்கு பதில் தெரிவிக்க அமைச்சர்கள் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறினார்.
இதனை அடுத்து நாட்டில் காணப்படும் டொலர் பற்றாக்குறை மற்றும் 6 பில்லியன் அமெரிக்க டொலர் கடன்களை செலுத்துவது எவ்வாறு என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல கேள்வியைஎழுப்பியிருந்தார்.
இருப்பினும் குறித்த கேள்விகளுக்கு பதில்வழங்க முடியாமல் இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க மௌனம் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.