வழங்கப்பட்ட வாக்குறுதிகள் மீறப்பட்டு வருகின்ற காரணத்தினாலேயே அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு விமர்சிப்பதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கின்றார்.
இது அரசாங்கத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக தெரிந்தாலும் அதனை தாம் நியாயமாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு பங்காளிக் கட்சிகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார்.
தேர்தல் மேடைகளில் தெரிவித்தமைக்கு இணங்கவே தாம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் உதய கம்மன்பில கூறினார்.
இருப்பினும் அரசாங்கத்தின் தற்போதைய பயணம் பல முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது என்றும் பொது வேலைத்திட்டங்கள் குறித்து தீர்மானம் எடுக்கும் வேளையில் தவறான தீர்மானங்கள் எடுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக யுகதனவி ஒப்பந்தம், திருகோணமலை ஒப்பந்தம் போன்றவற்றில் தமது முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதாகவும், தமது நிலைப்பாட்டில் இருந்து ஒருபோதும் மாறவோ பின்வாங்கவோ போவதில்லை என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
மேலும் 20 ஆம் திருத்தம் நிறைவேற்றப்பட்ட வேளையில், அமைச்சரவையில் மௌனம் காத்து, வாத விவாதம் நடத்தாது செய்த தவறை இனியும் செய்ய முடியாது என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.