அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி நாளை முன்னெடுக்கவிருந்த போராட்டங்களை தடுக்கும் வகையில் பொலிஸார் பல நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்றுள்ளனர்.
புதுக்கடை, மஹர, கடுவெல, ஹோமாகம நீதவான் நீதிமன்றங்களில் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
எவ்வாறாயினும், மாளிகாகந்த, கங்கொடவில நீதவான் நீதிமன்றம் மற்றும் கொழும்பு பிரதான நீதவான் ஆகியோர் போராட்டங்களைத் தடுக்க கோரி பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியைப் பெறாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாளை எதிர்ப்பு போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்து பொலிஸார் மேற்படி நீதிமன்றில் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இருப்பினும் திட்டமிடப்பட்ட போராட்டம் நடத்தப்படும் இடம் சரியாகத் தெரியவில்லை என்ற காரணத்தினாலேயே கொழும்பு பிரதான நீதவான் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் அடக்குமுறை முயற்சிகளுக்கு அஞ்சப்போவதில்லை என்று தெரிவித்துள்ள எதிர்க்கட்சியினர் வாழ்க்கை செலவு அதிகரித்து வரும் நிலையில் போராட்டத்தை தவிர தங்களுக்கு மாற்று வழி இல்லை என்றும் கூறியுள்ளனர்.