1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தை (தற்காலிக ஏற்பாடுகள்) மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகள் குழுவின் அறிக்கை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம், ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து நேற்று(திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டது.
அக்குழுவின் தலைவரும் பாதுகாப்புச் செயலாளருமான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையில், இந்த அறிக்கையின் முதற் பிரதி, ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் இடையே ஏற்பட்டுள்ள உரையாடல்களைக் கவனத்திற்கொண்டு, 1979ஆம் ஆண்டு 48ஆம் இலக்க பயங்கரவாத ஒழிப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியிடம் நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழுவுக்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக, 2021 ஜூன் 24ஆம் திகதியன்று, மேற்படி அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டது.
பாதுகாப்புச் செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக, நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ், பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ருவன் குலதுங்க, சட்ட வரைவாளர் தில்ருக்ஷி சமரவீர, நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளர் பியுமந்தி பீரிஸ், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புள்ளே, வெளிவிவகார அமைச்சின் பிரதி சட்ட ஆலோசகர் திலானி சில்வா, வெளிவிவகார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மஹேஷா ஜயவர்தன ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனாநாயக்க, இந்த அதிகாரிகள் குழுவின் செயலாளராகச் செயற்பட்டார்.