அபாயகரமான பகுதிகளில் வசிக்கும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை வழங்கினார்.
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் நாடாளுமன்ற குழு அறை 02இல் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவது தொடர்பாக இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து பிரதமர் இதன்போது கேட்டறிந்தார்.
தற்போதைய தொற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தடுத்து வைக்காது பாதிக்கப்பட்ட 31,475 பேரை இதுவரை அவர்களது சொந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் தெரியவந்தது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் ஏற்கனவே 21 மாவட்டங்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளது. முதற்கட்ட இழப்பீடு வழங்கும் நடவடிக்கை தாமதமின்றி நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
சுமார் 15,000 குடும்பங்கள் அதிக அபாயம் மிகுந்த பிரதேசங்களில் நீண்டகாலமாக வாழ்ந்து வருவதாகவும், ஆனால் இதுவரை 3000 குடும்பங்கள் மாத்திரமே வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதன்படி, தற்போது அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் வாழும் 12,000 குடும்பங்களை விரைவில் பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துமாறு பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆபத்தான சூழ்நிலையை கண்டறிந்து, அதற்கேற்ப முன்னுரிமை அளித்து, இந்த மக்களை ஆபத்தில் இருந்து மீட்க திட்டமிடவும் பிரதமர் அறிவுறுத்தினார்.
மீள்குடியேற்றத்திற்காக காணிகளை சுவீகரிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து அமைச்சர் சமல் ராஜபக்ஷ கவனத்திற்கு கொண்டு வந்தார். இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் ஒன்றிணைந்து தீர்வு காண்பது என இந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.
கனமழை காரணமாக மண்சரிவு, பலத்த காற்று, வெள்ளம், திடீர் வெள்ளம் மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக இதுவரை 21 மாவட்டங்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 262,831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பதுளை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, நுவரெலியா, அனுராதபுரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மாவட்டங்களில் நிலவும் மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு அடிக்கடி இடம்பெற்று வருவதனால், அதன் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்கு முறையான நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அனர்த்தங்கள் நீண்டகாலமாக இனங்காணப்பட்டு வருவதால் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்றவாறு குறிப்பிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது பொருத்தமானது என அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
கொழும்பு கண்டி பிரதான வீதி கடுகன்னாவையுடன் மூடுவது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. தற்போதைய நிலைமைக்கு தீர்வாக தற்போதுள்ள பாதையை ஒருவழிப் பாதையாக போக்குவரத்திற்காக திறப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறும், அவ்வாறு இன்றேல் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள மாற்று வழி பாதையை விரைவில் அபிவிருத்தி செய்யுமாறும் கௌரவ பிரதமர் இதன்போது நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.
குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பவித்ரா தேவி வன்னஆராச்சி, டளஸ் அழகப்பெரும, மஹிந்த அமரவீர, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தானந்த அளுத்கமகே, வாசுதேவ நாணயக்கார, பிரசன்ன ரணதுங்க, சரத் வீரசேகர மற்றும் இராஜாங்க அமைச்சர்களான இந்திக அனுருத்த, கனக ஹேரத், சனத் நிசாந்த, ஜீவன் தொண்டமான், ரொஷான் ரணசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்ஜீவ எதிரிமான்ன, சுதர்ஷன தெனிபிடிய, வசந்த யாப்பா பண்டார, ராஜிகா விக்ரமசிங்க, கலாநிதி சுரேன் ராகவன், பிரதமரின் செயலாளர் காமினி எஸ்.செனரத், பிரதமரின் மேலதிக செயலாளர் சட்டத்தரணி சமிந்த குலரத்ன உள்ளிட்ட அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.