ஐக்கிய மக்கள் சக்தி நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியில், சுகாதார விதிமுறைகளை மீறியவர்கள் மற்றும் பேரணியை ஏற்பாடு செய்தவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் இந்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அருகில் ஆரம்பமான இந்தப் பேரணி, காலிமுகத்திடலை சென்றடைந்தது.
இந்த நிலையில், குறித்த ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பாக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகக் பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த பேரணியில் பங்கேற்பதற்காக நேற்றையதினம், நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் பேருந்துகளில் கொழும்பிற்கு வரவிருந்த நிலையில், வீதி தடைகள் ஏற்படுத்தி பேருந்துகளைத் திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் போராட்டத்திற்கு சென்றவர்களுக்கும்,பொலிஸாருக்கும் இடையில் சில பகுதிகளில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.