இலங்கையின் நடனக் கலையை சர்வதேச அரங்கிற்கு எடுத்துச் சென்ற முன்னணி நடனக் கலைஞரான தேசபந்து கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்படும் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் முன்னிலையில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் எச்.ஈ.கோபால் பாக்லே அவர்களினால் இன்று (புதன்கிழமை) அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் இந்திய குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது 2020 ஆம் ஆண்டிற்காக கலைத்துறையில் ஆற்றிய சேவைக்காக கலாநிதி வஜிரா சித்திரசேன அவர்களுக்கும், இலங்கையில் ஹிந்தி மொழியை பிரபலப்படுத்தி இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்க அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
புதுடெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் வைத்து 2021 நவம்பர் 8ஆம் திகதியன்று இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் அவர்களினால் பேராசிரியர் இந்திரா தசநாயக்க சார்பில் அவரது மகள் வத்சலா தசநாயக்க அவர்கள் பத்மஸ்ரீ விருதைப் பெற்றுக்கொண்டார்.
கலாநிதி பண்டித் டப்ளிவ்.ஏ.அமரதேவ அவர்கள் 2002ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் பிரதமர் அலுவலக பணிக்குழாம் பிரதானி யோஷித ராஜபக்ஷ, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, இந்திய உயர் ஸ்தானிகர் வினோத் கே. ஜாகொப் உள்ளிட்ட இந்திய உயர்ஸ்தானிகராலய அலுவலக அதிகாரிகள் மற்றும் கலாநிதி வஜிரா சித்ரசேன அவர்களது குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.