வீதிப் பாதுகாப்புச் சட்டங்களை கடுமையாக்குவதற்கான அரசாங்கத் திட்டங்களின் கீழ், அடுத்த ஆண்டு முதல் வாகனங்களை செலுத்தும் போது கையில் தொழில்நுட்ப சாதனங்களை வைத்திருக்க பிரித்தானிய ஓட்டுநர்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
வாகனம் ஓட்டும் போது, அவசர தேவையின்றி கையடக்க தொலைபேசியில் அழைப்பது அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது ஏற்கனவே சட்டவிரோதமானது.
இந்தநிலையில், எதிர்வரும் 2022ஆம் ஆண்டு முதல், ஓட்டுநர்கள் புகைப்படம் எடுக்க அல்லது கேம்களை விளையாடுவதற்கு சாதனத்தைப் பயன்படுத்துவதைத் தடுக்கும்.
இந்த விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 200 பவுண்டுகள் அபராதமும் ஆறு உரிமப் புள்ளிகளும் விதிக்கப்படும்.
இதுகுறித்து போக்குவரத்து செயலர் கிராண்ட் ஷாப்ஸ் கூறுகையில், ‘விதிகளை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்குவது எளிதாக இருக்கும்.
கையில் கையடக்கத் தொலைப் பேசிகள் வைத்திருக்கும் போது அதிகமான இறப்புகள் மற்றும் காயங்கள் ஏற்படுகின்றன.
சட்டவிரோதமாக தங்கள் கையடக்கத் தொலைப் பேசிகளை பயன்படுத்துபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடருவதை எளிதாக்குவதன் மூலம், வீதியை பயன்படுத்துபவர்கள் அனைவரையும் மேலும் பாதுகாக்கும் அதே வேளையில், 21ஆம் நூற்றாண்டில் சட்டம் கொண்டு வரப்படுவதை நாங்கள் உறுதிசெய்கிறோம்’ என கூறினார்.