மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குருநானக் ஜெயந்தியை ஒட்டி பல்வேறு விவகாரங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், மத்திய அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாகவும், விவசாயிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்ல வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், 2014 ஆம் ஆண்டு முதல் விவசாயிகளுக்கு சேவை செய்வதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
வேளாண் சட்டங்கள் தொடர்பில் விவசாயிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தமையை சுட்டிக்காட்டிய அவர், அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்ததையும் தெரிவித்தார்.
ஆகவே மூன்று வேளாண் சட்டங்களையும் முறைப்படி திரும்பப் பெறுவதாகவும், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.