மத்திய அரசாங்கத்தினால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாது உள்ளதென இலங்கை தேசிய நிர்மாண சங்கத்தின் வடமாகாண கிளையின் தலைவர் அன்ரன் றேமன்ஸ் குரூஸ் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “2019ஆம் ஆண்டு ஏப்ரல் குண்டு வெடிப்பு மற்றும் கொரோனா காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்து, தற்போது மிகவும் எதிர்பாராத வகையில் பொருட்களின விலை அதி உச்சத்தை அடைந்துள்ளது.
இலங்கை வரலாற்றில் இது முதல் முறையாகவும் உள்ளது. இது தனியாக கம்பி, சீமெந்து மட்டும் அல்லாது கட்டிடத்திற்கு தேவையான அனைத்து வகை கற்கள், அலுமினியம், கூரை பொருட்கள் மற்றும் சிறிய சிறிய சகல கட்டுமான பொருட்களும் விலை அதிகரித்துள்ளது. ஆனால் இதன் மேலதிக விலை ஏற்றத்திற்கான செலவை வேலை தருநர்கள் தர மறுக்கின்றார்கள்.
5 மில்லியனுக்கும் 3 மாத ஒப்பந்த காலத்திற்கு மேற்பட்ட வேலைகளுக்கு விலையேற்றத்திற்கான சூத்திரம் பாவிப்பதற்கு இடம் இருந்தும் அந்த நிபந்தனை செயல்படுத்த முடியாதவாறு நிபந்தனைகள் மாற்றியமைத்து பல ஒப்பந்தங்கள் கோரப்படுகின்றது.
மேலும் அந்த நிபந்தனைகள் உள்ள ஒப்பந்தத்திலும் கூட சில பொருட்களின் விலையேற்றத்ததை அச் சூத்திரம் மூலம் பெறமுடியாமல் உள்ளது.
அதன்படி ஒப்பந்தத்தின் பிரகாரம் ஒரு ஒப்பந்தகாரருக்கு முற்பணமானது 14 நாட்களிலும் இடைக் கொடுப்பனவு 35 நாட்களிலும் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் இங்கு எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவ்வாறு கொடுப்பனவு கொடுக்கப்படுவதில்லை. அந்த தாமதத்திற்கான வட்டியும் கொடுக்கப்படுவதில்லை.
இதில் “அருகில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டமானது” 2016ம் ஆண்டு தொடக்கம் 2020 ஆண்டு வரை செய்யப்பட்ட பல வேலைக்கு கொடுப்பனவு ஒப்பந்தகாரர்களுக்கு கொடுக்கப்படவில்லை.
இத்திட்டமானது மாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கட்டிடத் திணைக்களம், திட்ட முகாமைத்துவ அலுவலகம் ஊடாகவும் வேலைகள் செய்து 2018 ஆண்டு தொடக்கம் கொடுப்பனவு எடுக்காத ஒப்பந்தகாரர்களும் உள்ளார்கள். அதன் பெறுமதி 16.50 கோடி ரூபா ஆகும் அதில் மேலும் வழங்கப்பட்ட வேலைகளை முடிவுறுத்துவதற்கு 62 கோடி ரூபா தேவையாக உள்ளது.
அதே போன்று கிராம உட்கட்டுமான அபிவிருத்தி திட்டம் மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு வேலைகள் முடிவுறுத்தப்பட்டு சரியாக இரண்டு வருடம் கடந்தும் 80 வீதமான கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை.
அதன் பெறுமதி 12 கோடி ரூபா ஆகும். மேலும் மத்திய அரசால் ஒப்பந்தம் வழங்கப்பட்டு செய்து முடிக்கப்பட்ட பல வேலைகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படாமல் உள்ளது.
மேலும் மாகாணங்களுக்கு குறித்து ஒதுக்கப்பட்ட நிதி வேலைக்கான கொடுப்பனவு அதிகமான ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் முழுமையாக வழங்கப்படாதுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அந்த திட்டத்தை நிறுத்தி உள்ளமையால் பல வேலைகள் முடிவுறுத்தப் படாமலும் உள்ளது. முடிவுறுத்தப்பட்ட வேலையிலும் கொடுப்பனவு கொடுக்கப்படவில்லை.
இவ்வாறு பல பிரச்சனைகள் உள்ள எமது அங்கத்தவர்கள் பலர் தொழிலை தொடர்ந்து நடாத்த முடியாமலும் வங்கிகளில் இருந்து எடுத்த கடன்களை கட்ட முடியாமலும் உள்ளார்கள்.
எனவே இது தொடர்பாக நாம் ஆளுநருடன் உயரதிகாரிகளுடனும் கதைப்பதற்கு நேரம் கேட்டு 2019 ஆண்டு ஜுலை மாதத்திற்கு பின்னர் தொடக்கம் இன்று வரை பல கடிதங்கள்,தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டும் எம்மை அவர்கள் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கூட தரவில்லை.
எனவே எமக்கு வேறு வழியில்லாமல் இந்த ஊடக சந்திப்பை முதல் முறையாக கூட்டி எங்களது பிரச்சினைகளை உங்கள் ஊடாக வெளிகொண்டு வருகிறோம்.
இதற்கு பிறகும் எமக்கான தீர்வு கிடைக்கவில்லையாயின் நாம் வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழியில்லை. இதனால் ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி அது சார்ந்த பல தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.