2021-22ஆம் ஆண்டு பருவக்காலத்துக்கான ரி-10 லீக் தொடர், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியது.
இதில் முதல் நாளில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளின் முடிவுகளை பார்க்கலாம்.
அபுதாபியில் நடைபெற்ற முதல் லீக் போட்டியில், நோதர்ன் வோரியஸ் அணியும் டெல்லி புல்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி புல்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நோதர்ன் வோரியஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 107 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ரொவ்மன் பவல் 38 ஓட்டங்களையும் மொயின் அலி 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
டெல்லி புல்ஸ் அணியின் பந்துவீச்சில், சிராஸ் அஹமட், ராம்போல், ரொமரியோ செப்பர்ட் மற்றும் பிராவோல ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 108 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய டெல்லி புல்ஸ் அணி, 9 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் டெல்லி புல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மொஹமட் ஹபீஸ் 31 ஓட்டங்களையும் ரமஹனுல்லா குர்பாஸ் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நோதர்ன் வோரியஸ் அணியின் பந்துவீச்சில், ஜோசுவா லிட்டில், இம்ரான் தாஹிர், அபிமன்யு மிதுன் மற்றும் கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, ரமஹனுல்லா குர்பாஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
………….
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில், அபுதாபி அணியும் பங்களா டைகர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, பங்களா டைகர்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அபுதாபி அணி, நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்கள் நிறைவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஸ்டெயர்லிங் 59 ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பங்களா டைகர்ஸ் அணியின் பந்துவீச்சில், போல்க்னர், உதான மற்றும் ஹவ்ல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 146 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பங்களா டைகர்ஸ் அணியால், 10 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ஓட்டங்களை மட்டுமே பெற முடிந்தது. இதனால் அபுதாபி அணி 40 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆந்ரே பிளெட்சர் 24 ஓட்டங்களையும் ஹஸ்ரதுல்லா சஷாய் 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அபுதாபி அணியின் பந்துவீச்சில், மெர்சன்ட் டி லேன்ஞ் 5 விக்கெட்டுகளையும் லியாம் லிவிங்ஸ்டன், ஜேமி ஓவர்டொன் மற்றும் டேனி பிரிக்ஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மெர்சன்ட் டி லேன்ஞ் தெரிவுசெய்யப்பட்டார்.