உலகளாவிய ரீதியில் தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி, நவம்பர் 21ஆம் திகதியான இன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழீழத் தேசியக்கொடி நாள் நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகளெங்கும் இடம்பெறுகின்றன என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நாளினையொட்டி பல்வேறு நிகழ்வுகள் புலம்பெயர் நாடுகள் எங்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினாலும் பொது அமைப்புக்களினாலும் ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஐரோப்பிய நேரம் மதியம் 12 மணி முதல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வலைக்காட்சி வழியே அனைத்து நாடுகளது நிகழ்வுகளையும் நேரலையாக காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பயன்படுத்தி வந்த கொடியில் இருந்த எழுத்துக்கள் நீக்கப்பட்ட கொடி, தமிழீழத்தின் தேசியக் கொடியாக மாவீரர் எழுச்சி வாரத்தின் தொடக்க நாளான நவம்பர் 21ஆம் நாளன்று (1990) பிரகனடப்படுத்தப்பட்டிருந்தது.
அந்நாளையே தமிழீழத் தேசியக்கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.