யாழ்ப்பாணம்- கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்திற்கு முன்பாக துப்பரவு பணியில் ஈடுபடுகிறவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நடந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
கோப்பாய் துயிலும் இல்லத்தை இராணுவத்தினர் இடித்தழித்து அப்பகுதியில் பாரிய இராணுவ முகாமை அமைத்து, நிலைகொண்டுள்ளனர்.
ஆகையினால் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில், மாவீரர் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யபடுவது வழமையாகும்.
இந்நிலையில் தற்போது மாவீரர் வாரம் ஆரம்பமாகி உள்ளமையினால், அக்காணியின் முன்பக்கமாக வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன்போது, கோப்பாய் பொலிஸார் மற்றும் பெருமளவான இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டதுடன் சிவில் உடையில் வந்த இராணுவத்தினர் சிலர் தாமும் துப்பரவு பணியில் ஈடுபடுவதாக துப்பரவு பணியில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.