மாவீரர் தினத்தினை அனுஷ்டிப்பதற்கு எதிராக வழங்கப்பட்ட தடையுத்தரவிற்கு எதிராக எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அரசியல் கைதி செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் செல்வநாயகம் அரவிந்தன் மேலும் கூறியுள்ளதாவது, “மாவீரர் தினத்தினை அனுஸ்டிப்பதற்கு வவுனியா நீதிமன்றினால் 8 பேருக்கு தடை உத்தரவு வழங்கப்பட்டிருந்தது.
வவுனியா நீதிமன்றினால் 8 பேருக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவில் பிரதிவாதியாக கூறப்பட்டிருக்கின்ற செ.அரவிந்தனாகிய நான், வவுனியா நீதிவான் நீதிமன்றத்தில் எதிர் மனு வழக்கு தாக்கல் செய்துள்ளேன்.
குறித்த வழக்கின் முழுமையான தீர்ப்பு நாளை (புதன்கிழமை) வழங்கப்படும் என நீதவானால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸார் வீடுகளில் நினைவேந்தலை செய்வதற்கு தாங்கள் இடையூறாக இருக்க மாட்டோம் என்பதனை நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.