பாகிஸ்தானில் பலுசிஸ்தானின் மாகாணத்தில் உள்ள குவாடார் மாவட்டத்தில் தேவையற்ற சோதனைச் சாவடிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் அம்மாவட்டத்தில் உள்ள மீன்பிடி இழுவை படகுகளுக்கு எதிராகவும் குறித்த போராட்டக்காரர்கள் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.
எக்ஸ்பிரஸ் ட்ரிப்யூன் ஊடகமானது, குறித்த போராட்டம்தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது. குறித்த போராட்டத்தினை ஜமாத்-இ-இஸ்லாமி பலுசிஸ்தானின் மாகாணப் பொதுச்செயலாளர் மௌலானா ஹிதாயத்-உர்-ரஹ்மான் குறித்த மாவட்ட மக்களின் ஒத்துழைப்புடன் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.
அம்மாவட்டத்தில் உள்ள உள்ளுர் மீனவர்களுக்கு தொடர்ச்சியாக பெரும் நட்டங்கள் ஏற்படுவதற்கு தேவையற்ற சோதனைச் சாவடிகள் மற்றும் ஆம்கடல் மீன்பிடி விசைப்படகுகள் காரணமாக அமைவதால் அவற்றை அகற்றுமாறு வலுவான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, முன்னதாக, பலுசிஸ்தான் மாகாண முதலமைச்சர் ஜம் கமால் கான் அய்லானி அனுப்பிய தூதுக்குழு, போராட்டக்காரர்களுடன் பேச்சுக்களை நடத்தியது.
எனினும் அப்பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தமையால் போராட்டக்கரர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
அதேநேரம் தமது கோரிக்கைளுக்கும், பிரச்சினைகளுக்கும் அரசு தீர்வு வழங்கும் வரை முற்றுகை போராட்டம் தொடரும் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
இதேநேரம், கடந்த ஆகஸ்ட் மாதம், பாகிஸ்தானின் குவாடாரில் நூற்றுக்கணக்கான மக்கள் சீனாவின் இழுவை படகுகள் மூலம் சட்டவிரோத மீன்பிடித்தலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2015 ஆம் ஆண்டில், சீனா பாகிஸ்தானில் 46 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தட திட்டத்தை அறிவித்தது. இத்திட்டத்தில் பலுசிஸ்தான் மாகாணமும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.
அதாவது, பலுசிஸ்தானில் உள்ள பாகிஸ்தானின் தெற்கு குவாடர் துறைமுகத்தை அரேபிய கடலின் ஊடாக சீனாவின் மேற்கு ஜின்ஜியாங் பகுதியுடன் இணைப்பதே திட்டமாகும்.
அதன்மூலம் சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்த சாலை, ரயில் மற்றும் எண்ணெய் குழாய் இணைப்புகளை உருவாக்கும் திட்டங்களும் காணப்படுகின்றன.
மாகாணத்தில் சீனாவின் தலையீடு அதிகரித்து வருவதை பலூச்கள் எதிர்த்து வருவதோடு சீனர்கள் பிராந்தியத்தில் இருந்து அனைத்து செல்வங்களையும் கையகப்படுத்துவதற்காக அத்துமீறுபவர்களாக பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.