தென்னாபிரிக்காவில் புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் மாறுபாடு, சில ஆபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்குள் நுழையும் விமானங்களை தடை செய்ய தூண்டியுள்ளது.
இதன்படி, பல தென்னாபிரிக்க நாடுகளில் இருந்து பிரித்தானியாவுக்கு வரும் பயணிகள், புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
இன்று (வெள்ளிக்கிழமை) ஜி.எம்.டி. 12:00 முதல் ஆறு நாடுகள் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்படும் எனவும் விமானங்கள் தற்காலிகமாக தடைசெய்யப்படும் என்று பிரித்தானிய சுகாதார செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, தென்னாபிரிக்கா, நமீபியா, சிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ மற்றும் ஈஸ்வதினி ஆகிய நாடுகளில் இருந்து அனைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
பி.1.1.529 என அறியப்படும் புதிய கொவிட் மாறுபாடு நாம் இதுவரை பார்த்தவற்றில் மிக மோசமானது என ஒரு நிபுணர் விபரித்துள்ளார். மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தவிர்க்கும் திறனைக் கொண்டிருப்பதாகக் கவலை உள்ளது.
தென்னாபிரிக்கா, ஹொங்கொங் மற்றும் போட்ஸ்வானாவில் இதுவரை 59 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், பிரித்தானியாவில் இந்த புதிய கொவிட் மாறுபாடு எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.