கெரவலப்பிட்டியவில் உள்ள யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான பரிசீலனை உயர் நீதிமன்றத்தில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த மனு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான புவனேக அலுவிஹார, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.டி.பி.தெஹிதெனிய ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் விசாரணை இடம்பெறவுள்ளது.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பிரதிவாதிகளாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமெரிக்க நிறுவனம், நியூ ஃபோர்ட்ரஸ் எனர்ஜி மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவையை சட்டமா அதிபர் பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அமைச்சர்களான விமல் வீரவங்ச, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு தனியான சட்டத்தரணிகள் முன்னிலையாகவுள்ளனர்.
பங்குகளை மாற்றுவதன் மூலம் இலங்கையில் எரிவாயு உற்பத்தி செய்வதில் பிரதிவாதியான அமெரிக்க நிறுவனம் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கும் என்றும், பங்குகளை மாற்றும் போது கடுமையான ஏல நடைமுறை பின்பற்றப்படவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முறையான ஆய்வு நடத்தாமல், பங்குகளை மாற்றுவதற்கு அமைச்சரவை எடுத்த முடிவின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் ஆகவே அமைச்சரவையின் முடிவை செல்லுபடியற்றது என உத்தரவிட இந்த மனுக்கள் கோரியுள்ளன.