இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகின்ற போதிலும் மின்சார துண்டிப்பு இருக்காது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார்.
இலங்கையில் எரிபொருளுக்கு போதிய அன்னியச் செலாவணி இல்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்கவின் கருத்திற்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறினார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை பராமரிப்புக்காக 50 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் இந்த காலப்பகுதியில் நாட்டின் மின்சார தேவை நீர் மின் உற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் பதிலளித்தார்.
சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் திறக்கப்பட்ட பின்னரும் மின் உற்பத்திக்கு கூடுதலாக 40 நாட்களுக்கு போதுமான எரிபொருள் தங்களிடம் உள்ளது என்றும் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ள நீரின் ஒரு பகுதியை விவசாயத்திற்காகவும் மிகுதியை மின் உற்பத்திக்காகவும் விடப்படும் நிலையில் 2022 மார்ச் மாதத்திற்குள், உணவுப் பற்றாக்குறையுடன் நாடு நெருக்கடியை எதிர்கொள்ளும் என ரணில் விக்ரமசிங்க எச்சரித்தார்.