நாட்டில் இடம்பெற்ற இறுதி யுத்தகாலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதியில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இன்றைய தினமும் அகழ்வு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட இருப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட சுதந்திரபுரம் பகுதியில், நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் அகழ்வு நடவடிக்கைகள் நேற்று பொலிஸாரினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு- புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தங்கத்தை நீதிமன்றத்தின் உத்தரவிற்கு அமைய தோண்டி எடுப்பதற்கு முன்னதாக அமைச்சுக்களின் செயலாளர்கள் இருவர் இரகசியமாக தோண்டி எடுக்க முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையிலேயே நேற்று அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புலிகளினால் புதைக்கப்பட்டதாக கூறப்படும் தங்கத்தை, முல்லைத்தீவு நீதவானின் உத்தரவிற்கு அமைய கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தோண்டி எடுக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனாலும் மாவீரர் தின நிகழ்வுகளினால் இந்த நடவடிக்கை நேற்று வரையில் ஒத்திவைக்கப்பட்டது.
இத்தகையநிலையிலேயே ஏற்கனவே நீதிமன்றம் அறிவித்த திகதியான நேற்று, மேற்படி அகழ்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.