உக்ரைனில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், ஜோ பைடனும் விளாடிமிர் புடினும் செவ்வாய்கிழமை காணொலி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான பாரிய அளவிலான தாக்குதலுக்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்பதற்கான ஆதாரம் அமெரிக்காவிடம் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் அண்மையில் கூறியிருந்தார்.
இருப்பினும் அத்தகைய செய்திகளை மறுத்துள்ள ரஷ்யா, உக்ரைனே தனது சொந்த படைகளை குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின்போது, உக்ரைன் எல்லையில் ரஷ்ய இராணுவ நடவடிக்கைகள் குறித்த அமெரிக்காவின் கவலைகளை ஜோ பைடன் சுட்டிக்காட்டுவார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும் உக்ரைனின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான அமெரிக்காவின் ஆதரவை ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் உறுதிப்படுத்துவார் என்றும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
கவச வாகனங்கள், மின்னணு போர் முறைமைகள் மற்றும் 94 ஆயிரம் துருப்புக்களை ரஷ்யா எல்லையில் நிறுத்தியுள்ளதாக உக்ரைன் கூறுகிறது.
2014 ஆம் ஆண்டு உக்ரைனிடம் இருந்து கிரிமியா நகரை இணைத்ததில் இருந்து அதன் எல்லையில் ரஷ்யப் படைகள் அதிக அளவில் குவிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.