மியன்மாரில் ஆட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆங் சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், ஆங்சா சூகிக்கு எதிராக அண்மையில் வெளியிடப்பட்டுள்ள தீர்ப்புகள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
அண்டை நாடு என்ற முறையில் மியன்மார் ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதை இந்தியா பெரிதும் விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மியன்மாரில் சட்டத்தின் ஆட்சியும் ஜனநாயக மாண்பும் பாதுகாக்கப்பட வேண்டும். அவற்றை குலைக்கும் எந்த நடவடிக்கையும் மிகவும் கவலைக்குரியது ஆகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் முறைக்கேடுகள் நடைபெற்றதாகக்கூறி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கலைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.