பாகிஸ்தான் – சியால்கோட்டில் கொடூரமாக கொல்லப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று (புதன்கிழமை) இடம்பெறவுள்ளன.
கனேமுல்ல- பொல்ஹேன பொது மயானத்தில், பிரியந்த குமாரவின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
பிரியந்த குமார தியவடனவின் சடலம் நேற்றுமுன்தினம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் அவரது பூதவுடல் கணேமுல்ல- பொக்குண சந்தி – கந்தலியத்த, பாலுவ பிரதேசத்திலுள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
இதன்போது அவரது இல்லத்துக்கு மத தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள் சென்று நேற்று அஞ்சலி செலுத்தினர்.
பாகிஸ்தான்– சியல்கொட் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இலங்கையைச் சேர்ந்த பொறியியலாளர் பிரியந்த குமார என்பவர் ஒரு கும்பலால் அடித்து, எரியூட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார்.
குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இலங்கை அரச தலைவர்கள் உட்பட பலர் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை பிரதான சந்தேகநபர் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.