இந்தியாவில் கணக்கில் வராமல் 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளமை பனாமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் மூலம், கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்த விவாதங்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றுள்ளன.
இதற்கு பதிலளித்த நிதித் துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி குறித்த முறைக்கேட்டில் ஈடுபட்ட நபர்களின் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
பனமா மற்றும் பாரடைஸ் ஆவணங்களின் அடிப்படையில், கடந்த அக்டோபர் மாதம் முதலாம் திகதி நிலைவரப்படி 20 ஆயிரத்து 353 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், குறித்த முதலீடுகள் கணக்கில் வரவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவுடன் தொடர்புடைய 930 நிறுவனங்கள் மற்றும் நபர்களால் இந்த முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
1961ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டம், 2015ஆம் ஆண்டின் கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வருமான வரித் துறை உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.