ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின், முதல் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.
இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
ஆட்டநேர முடிவில், ட்ராவிஸ் ஹெட் 112 ஓட்டங்களுடனும் மிட்செல் ஸ்டாக் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், அவுஸ்ரேலியா அணி 196 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளது.
நேற்று (புதன்கிழமை) பிரிஸ்பேன் மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் 39 ஓட்டங்களையும் ஒல்லி போப் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், பெட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளையும் மிட்செல் ஸ்டாக் மற்றும் ஜோஸ் ஹெசில்வுட்; ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கிறீன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்ரேலியா அணி, இன்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 343 ஓட்டங்களை பெற்றது.
அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி சார்பில், டேவிட் வோர்னர் 94 ஓட்டங்களையும் மார்கஸ் ஹரிஸ் 3 ஓட்டங்களையும் மார்னஸ் லபுஸ்சேகன் 74 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 12 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
கேமரூன் கிறீன் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும், அலெக்ஸ் கெர்ரி மற்றும் பெட் கம்மின்ஸ் ஆகியோர் தலா 12 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஒல்லி ரொபின்சன் 3 விக்கெட்டுகளையும் கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஜெக் லீச் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இன்னமும் 3 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாவது நாளுக்காக அவுஸ்ரேலியா அணி நாளை துடுப்பெடுத்தாடவுள்ளது.