அரசியல் பழிவாங்கல் சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் ஆகியவற்றை செயற்படுத்துவதை இடைநிறுத்துமாறு கோரி முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தாக்கல் செய்த ரிட் மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஆதரவிற்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, நீதியரசர் தேவிகா அபேரத்ன மற்றும் நீதியரசர் டி.எம்.சமரகோன் ஆகியோரை உள்ளடக்கிய குழு, குறித்த மனுவை ஜனவரி 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தனது மனுவில், மனுதாரர் தொடர்பான 17-51 பக்கங்களில் உள்ள கண்டறிதல் மற்றும் பரிந்துரைகளின் செயற்பாட்டை இடைநிறுத்த இடைக்கால உத்தரவை கோரியுள்ளார்.
கடந்த 2020 செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி, ஜனாதிபதி ஆணைக்குழுவில் தான் கலந்துகொண்டதாகவும் தான் பிரதிவாதியாக கருதப்படவில்லை என்றும் சாட்சியாக மாத்திரம் கருதப்படுவதாகவும் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டதாக விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மனுதாரர், தனக்கு எதிராக எந்த கண்டறிதலும் பரிந்துரைகளும் செய்யமாட்டார்கள் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் கண்டறிதல் மற்றும் பரிந்துரைகள் உள்ளன என்று மனுதாரர் கூறினார்.
ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணையின்போது, நீதி விதிகள் முழுமையாக மீறப்பட்டுள்ளதாகவும் தமக்கு முறையான விசாரணைகள் வழங்கப்படவில்லை எனவும் முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு எதிராக சேகரிக்கப்பட்ட விடயங்கள், பகுத்தறிவற்ற மற்றும் தன்னிச்சையானவை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ரணில் விக்ரமசிங்க சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸ் முஸ்தபா முன்னிலையாகி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.