பாகிஸ்தானில் தனிநபர்கள், குழுவினர்கள் கடத்தப்படுதல், வலிந்து காணாமலாக்கப்படுதல், பகிரங்க வெளியில் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்படுதல் உள்ளிட்ட விடயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.
தற்போதைய இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் முதலில் ஊடகங்களை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை திரைமறைவில் மேற்கொண்டது. அதனையடுத்து பாகிஸ்தானின் பல ஊடகங்கள் தாமாகவே சுயதணிக்கையை பின்பற்றலாயினர்.
அதன்பின்னர், அங்கு செயற்படும், உள்நாட்டு, வெளிநாட்டு அரசசார்பற்ற மற்றும் தொண்டு நிறுவனங்களை தடைசெய்தது. அதற்கு தமது நாட்டின் ‘இறைமையை’ காரணம் காண்பித்தது.
குறிப்பாக, தமது நாட்டின் இரகசியங்களை குறித்த நிறுவனங்கள் பெற்றுக்கொள்வதாகவும், அது தமது நாட்டின் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் குறிப்பிட்டது.
ஆனால், அரசார்பற்ற நிறுவனங்களும், தொண்டு நிறுவனங்களும், மனித உரிமைகளை மதித்தல், பெண்களுக்கு உரிமைகளை பெற்றுக்கொடுத்தல், மத அடிப்படைவாதம் வளர்வதை தடுத்தல், ஜனநாயக விழுமியங்களை தோற்றுவித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்தே வந்திருந்தன.
இதனைவிடவும், பாகிஸ்தானில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும், சிறுவர் தொழிலாளர்களை கட்டுப்படுத்தல், வறுமையை ஒழித்தல் உள்ளிட்ட சமூக மேம்பாட்டுச் செயற்பாடுகளையும் முன்னெடுத்திருந்தன.
ஆனால், இவ்விதமான செயற்பாடுகள் சமூகத்தினுள் சென்று அச்சமூகம் மேம்பட்டுவிடக்கூடாது என்பதில் பாகிஸ்தான் அரசாங்கம் உட்பட அதனைச் சூழவுள்ள மத அடிப்படைவாத சக்திகள் விரும்பவில்லை.
அதன் காரணமாகவே, அரச சார்பற்ற மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக தடைகளை இம்ரான் கான் அரசு விதித்துள்ளது என்பதே யதார்த்தமாகும்.
இவ்வாறிருக்க, அண்மையில் பலுசிஸ்தானில் கல்லூரி மாணவர்கள் இருவர் கடத்தப்பட்டனர். அதுமட்டுமன்றி சோதனைச் சாவடிகள் அதிகரிக்கப்பட்டன. இவ்விதமான நிகழ்வுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் நடத்தப்பட்டாலும் அதனால் எவ்விதமான பலனையும் காண முடியவில்லை.
மாறாக பாகிஸ்தான் அரசு, ஜனநாயகத்திற்கு எதிர்மறையான நடவடிக்கைகளையே முன்னெடுத்தது. தெஹ்ரீக் இ-லப்பைக் அமைப்பின் தடையை நீக்குவதாக பிரதமர் இம்ரான் தலைமையிலான பாகிஸ்தான் அரசாங்கம் தீர்மானித்து அறிவித்தது.
இந்த தீர்மானம், தாங்களை பலிகடா ஆக்கும் ஒரு செயற்பாடு என்றும், கடமையின் போது செய்த தனிப்பட்ட தியாகங்கள் புறக்கணிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தபோதும் அவ்விடயம் கருத்திற் கொள்ளப்பட்டிருக்கவில்லை.
அதன் பிரபலிப்பாக, கடந்த 3ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையைச் சேர்ந்த பொறியிலாளரான பிரியந்த குமார மிலேச்சத்தனமாக கொலை செய்யப்பட்டிருக்கின்றார்.
இவரது உடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு இறுதிக்கிரியைகளும் இடம்பெற்றாகிவிட்டது. இவரது மரணத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இவருடைய உறவினர்கள் தமது கணவரின் இறப்பிற்கு நீதி கோரி நிற்கின்றார்கள்.
இந்த கொடூர சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான முஹமது கலாம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர் தான் பிரியந்த குமாரவின் உடலத்திற்கு எண்ணெய் ஊற்றி எரியூட்டியதையும் தெளிவாக வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரியந்த குமாரவின் கொலையுடன் நெருக்கமான தொடர்புடைய சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் பொலிஸார் குறிப்பிடுகின்றார்.
ஆனால் இதுவரையில் பாகிஸ்தான் அரசாங்கம் மத அடிப்படைவாத அமைப்புக்கள் தொடர்பில் அமைதியாகவே இருக்கின்றது. இந்த கோரமான சம்பவம் நிகழ்ந்த பின்னரும் கூட மத அடிப்படைவாத தரப்புக்களை தடைசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அதுபற்றிய அறிவிப்புக்களைச் செய்யவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
பிரியந்த குமாரவின் கொடூரகொலை நிகழ்ந்து வாரமொன்று கூட நிறைவடையாத நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ஃபைசலாபாத் நகரில் உள்ள கடை வீதியில் 4 பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் அழைத்துச் சென்ற காணொளி சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியாகியுள்ளது.
இதில், கும்பலொன்று, பெண்களை நிர்வாணமாக்கி தடிகளால் அவர்களை தாக்கி வீதிகளில் இழுத்துச் செல்கின்ற மிலேச்சத்தனமான விடயம் பதிவாகியுள்ளது. குறித்த நான்கு பெண்களும் திருட்டில் ஈடுபட்டதாக அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் கும்பலில் உள்ளவர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால், இந்தத் துன்பத்தை அனுபவித்த பெண்ணொருவர் உள்ளுர் ஊடகமொன்றிடத்தில், ‘நாங்கள் குறித்த பகுதிக்கு குப்பைப் பொருட்களையே சேகரிப்பதற்குச் சென்றோம். பின்னர் அங்குள்ள கடையில் தண்ணீர் கேட்டோம். ஆனால் எங்களை திருடர்களாக்கி தாக்கிவிட்டனர். சுமார் ஒருமணிநேரமாக கோரமாக எங்களை தாக்கினார்கள். யாரும் அதனைத் தடுக்கவில்லை’ என்று கூறியுள்ளனர்.
உண்மையில் இந்தச் சம்பவமானது, இரண்டு விடயங்களை வெளிப்படுத்தியுள்ளது. முதலாவது, பாகிஸ்தானில் பாகிஸ்தான் பிரஜைகளுக்கே பாதுகாப்பற்ற நிலைமைகள் காணப்படுகின்றன என்பது ஒன்றாகும்.
இரண்டாவது, பெண்கள் என்பதற்கு அப்பால் அடிப்படை மனிதாபமான பண்பு கூட இல்லாத அளவிற்கு அங்குள்ள கும்பல்களிடத்தில் காணப்படுகின்ற மனோநிலை.
இவ்வாறான நிலைமையால் பாகிஸ்தானிற்கு வெளிநாடுகளிலிந்து சென்று பணியாற்றுபவர்களினுள் தமது பாதுகாப்பு எவ்வாறு இருக்கும் என்ற கேள்வியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதன் காரணமாக, பல வெளிநாட்டு பணியாளர்கள் மெல்ல தமது சொந்த நாடுகளுக்கு நகரத் தொடங்கி விட்டார்கள்.
குறிப்பாக, படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமார பணியாற்றிய நிஜாம் சன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி அலி அன்வர் பிரியந்த குமாரவின் கொலையை கருத்திற் கொண்டு தமது நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட கணக்காய்வாளர்கள் பாகிஸ்தானுக்கு வர மறுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இக்கொடூரம் நிகழ்ந்த சியல்கோட்டில் ஏற்றுமதி தொழில் பின்னடைவை சந்தித்துள்ளதாக சியல்கோட் வர்த்தக சபை தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தேசிய ஏற்றுமதி வருவாயில் சியல்கோட் ஏற்றுமதி தொழில்கள் 2.2 பில்லியன் ரூபாவை பங்களிப்புச் செய்கின்றது என்பது இங்கு குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயமாகின்றது.
ஆகவே, பாகிஸ்தான் தன்னை ஜனநாயக விழுமியங்களை பாதுகாக்கும் ஒரு நாடாக ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பிலும், சர்வதேச அரங்குகளிலும் காண்பித்துக் கொள்கின்றது. ஆனால் உண்மையில் பாகிஸ்தானில் நடந்தேறும் நிகழ்வுகள் அதற்கு எதிர்மாறாகவே உள்ளன.
குறிப்பாக, இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் தன்னை மனித உரிமைகளுக்கு, மக்கள் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு ஜனநாயகவாத தரப்பாக காண்பித்தாலும், செயற்பாட்டில் அவ்விதமாக எதனையும் காணமுடியவில்லை என்பதற்கு அண்மைக்கால சம்பவங்கள் அடிப்படையாக இருக்கின்றன.
இவ்வாறான நிலையில், பாகிஸ்தான் தொடர்ந்தும், அனைத்து ஜனநாயக, மனித உரிமை மற்றும் மனிதாபிமான மீறல்களை இருட்டடிப்புச் செய்து உலகத்திற்கு பொய்களை வெளிப்படுத்தி வரலாம் என்ற கனவில் இருக்கமுடியாது.
பாகிஸ்தானின் உள்ளுர் சம்பவங்கள் தற்போது உலக அரங்கில் பேசுபொருளாகிவிட்டன. அதற்கு காரணமாக மத அடிப்படைவாதமே காரணமாக இருக்கின்றது என்பதும் வெளிப்பட்டாகிவிட்டது.
எனவே, இந்த விடயங்களில் இம்ரான் கான் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டியுள்ளது. அதனைவிடுத்து மத தீவிரவாதத்திற்கு தொடர்ந்தும் இம்ரான் கான் அரசாங்கம் தொடர்ந்தும் தீனி போடும் வகையில் அமைதியாக இருந்து அத்தரப்புக்களை ஆதரிக்குமாயின் அந்த அரசாங்கத்திற்கும், நாட்டிற்கும் எதிர்காலம் இறக்குமுகம் தான்.
-பெனிற்லஸ்-