தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டம் பல்வேறுபட்ட விவாதங்களுக்கு மத்தியில் 10மேலதி வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகரசபையின் வரவு செலவு திட்டத்தினை அங்கீகரிப்பதற்கான விசேட அமர்வு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.
மாநகரசபையின் சம்பிரதாயங்களுடன் ஆரம்பமான மாநகரசபையின் அமர்வின்போது இதன்போது மாநகரசபையின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு விசேட உரையாற்றப்பட்டது.
இதன்போது மாநகரசபையினால் ஒரு மாதகால தடைவிதிக்கப்பட்ட கிலேனி வசந்தகுமார் சபைக்கு வருகைதந்திருந்த நிலையில் மாநகரசபையின் விசேட அமர்வு என்ற அடிப்படையில் மாநகரசபையில் தீர்மானித்தால் அவரை சபையில் அனுமதிப்பதாக முதல்வரினால் தெரிவிக்கப்பட்டபோது சபை அதற்கான அனுமதிவழங்கிய நிலையில் தொடர்ந்து மாநகரசபையின் வரவு செலவு திட்டம் தொடர்பில் மாநகர முதல்வரினால் விசேட உரை நடாத்தப்பட்டது.
கொரனா அச்சுறுத்தல்,நிர்வாக சீர்கேடுகள் காரணமாக மாநகரசபையின் வருமானங்கள் முழுமையாக ஈட்டப்படாத நிலையிலும் பொதுமக்களுக்கான அபிவிருத்திகளை முழுமையாக நடைமுறைப்படுத்தமுடியாத நிலையிலும் இந்த வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பிப்பதாக முதல்வரினால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.
குறித்த வரவு செலவு திட்டம் தொடர்பில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு பிரதிநிதிகள் பல்வேறு கருத்துகளை முன்வைத்தனர்.இதன்போது குறித்த வரவு செலவு திட்டம் மற்றும் மாநகரசபையின் கடந்தகால செயற்பாடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தது.
இதனை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டம் வாக்கெடுப்புக்கு விடப்பட்ட நிலையில் 37பேர் இன்றைய அமர்வில் கலந்துகொண்டிருந்த நிலையில் 23பேர் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாகவும் 13பேர் எதிராகவும் வாக்களித்த அதேநேரம் ஒருவர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தார்.
இதனடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி,ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்கள்,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டு உறுப்பினர்கள்,ஈபிடிபி கட்சியின் ஒரு உறுப்பினர்,சுயேட்சைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களில் ஒருவர் நடுநிலை வகித்ததுடன் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு உறுப்பினர்களும், ,ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் ஒரு உறுப்பினரும,தமிழர் விடுதலைக்கூட்டணியின் நான்கு உறுப்பினர்களும் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.