மன்னாரில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 3060 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை ) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், மன்னாரில் கடந்த 10 நாட்களில் 144 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் இவ்வருடம் 3060 கொரோனா தொற்றாளர்களும், தற்போது வரை 3077 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு 2 கொரோனா மரணங்கள் பதிவாகி உள்ளது.மன்னார் பள்ளிமுனை யைச் சேர்ந்த 59 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் மரணித்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உள்ளமை தெரிய வந்துள்ளது.
இரண்டாவது நபர் மன்னார் உப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய பெண் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,அவருக்கு ஏற்பட்ட நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.