தனது நெருங்கிய நண்பரும் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, துரோகம் செய்துவிட்டதாக, முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஜோ பைடனின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததற்காக பெஞ்சமின் நெதன்யாகு மீது கோபமடைந்ததாக ட்ரம்ப் கூறினார்.
மத்திய கிழக்கு அமைதியை உருவாக்குவதில் தனது பங்கு பற்றிய புத்தகத்திற்கான நேர்காணலில், ட்ரம்ப் இந்த கருத்தினை வெளியிட்டார்.
ஆபிரகாம் உடன்படிக்கைகள் மற்றும் மத்திய கிழக்கு மறுவடிவமைப்பு என்ற புத்தகத்திற்காக இஸ்ரேலிய ஊடகவியலாளர் பராக் ராவிடிடம் பேசிய ட்ரம்ப்,
‘இஸ்ரேலை அழிவிலிருந்து காப்பாற்றியதாக நம்புகின்றேன். ஜோ பைடனை வாழ்த்திய முதல் நபர் பெஞ்சமின் நெதன்யாகு, நான் கையாண்ட மற்ற நபர்களை விட அவருக்கு தான் நான் அதிகம் செய்துள்ளேன். பெஞ்சமின் நெதன்யாகு, அமைதியாக இருந்திருக்கலாம். அவர் ஒரு பயங்கரமான தவறு செய்துவிட்டார்’ என கூறினார்.
ட்ரம்பின் கீழ் அமெரிக்க நிர்வாகம், 2017-2021ஆம் ஆண்டு வரை, இரு நாடுகளின் வரலாற்றில் இஸ்ரேலுக்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது.
ட்ரம்ப் பதவியில் இருந்தபோது நெதன்யாகு இஸ்ரேலிய பிரதமராக பணியாற்றினார். மேலும் இருவரும் குறிப்பாக சூடான தனிப்பட்ட உறவுகள் கொண்டவர்களாக சித்தரிக்கப்பட்டனர். பெரும்பாலும் ஒருவரையொருவர் பகிரங்கமாக புகழ்ந்து பேசினர்.