வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட நியமிக்கப்பட்டமை தொடர்பாக உள்நாட்டு மற்றும் சர்வதேச செயற்பாட்டாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தில் வசந்த கரன்னகொட சிறையில் இருக்க வேண்டும் என்றும் இதற்கு மாறாக உயர் அதிகாரங்களை வழங்கும் பதவிகளுக்கு அவரை நியமிப்பது தவறு என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலையிலான அரசாங்கம் காண்பித்துவரும் அலட்சியப் போக்கை இந்த நியமனம் தெளிவாக வெளிப்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் இனப் படுகொலை, மனி உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக தடைகளை விதிக்க வேண்டிய தருணம் இது என கனேடி தமிழர் தேசிய அவை கேட்டுக்கொண்டுள்ளது.
தண்டனைகளில் இருந்து தப்பிக்கும் போக்கு இலங்கையில் விரிவடைந்து வருவதாகவும் போர்க் குற்றச்சாட்டு உள்ளவர்கள் நாட்டின் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுவதன் மூலம் படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் கனேடி தமிழர் தேசிய அவை சுட்டிக்காட்டியுள்ளது.
இது குறித்து சர்வதேச மன்னிப்புச் சபையின் தெற்காசியப் பிராந்திய ஆய்வாளர் த்யாகி ருவன் பத்திரண அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
11 கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கில் தொடர்புபட்டிக்கக்கூடிய வசந்த கரன்னாகொட அதற்காக சிறையில் இருக்கவேண்டுமே தவிர, உயர் அதிகாரத்தை வழங்கும் பதவிகளுக்கு நியமிக்கப்படக்கூடாது என்று அவர் அப்பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வருட சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் இலங்கையைப் பொறுத்தமட்டில் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிப்பது மாத்திரமன்றி, அவர்களுக்கு முக்கியமான உயர்பதவிகளும் வழங்கப்படும் என்ற விடயம் நினைவுறுத்தப்பட்டுள்ளது என சட்டத்தரணியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான பவானி பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
அதுமாத்திரமன்றி இந்த நியமனம் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு மற்றும் அதிகரித்த இராணுவமயமாக்கம் ஆகியவற்றை வெளிப்படுத்தியிருப்பதுடன் அரசியல் ரீதியான பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் காண்பித்துவரும் அலட்சியப்போக்கு குறித்த தெளிவான செய்தியையும் வழங்கியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.