இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில், சீன உரத்திற்கான கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவையில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் பணிப்புரைக்கமைய விவசாய அமைச்சர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரால் அமைச்சரவைப் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
உரத்தினை கொண்டுவந்த சீன கப்பலுக்கு சுமார் 08 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவது தொடர்பாகவே அமைச்சரவையில் பேசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
சீன நிறுவனம் ஏற்கனவே சிங்கப்பூரில் மத்தியஸ்தம் செய்ய முயன்றுவரும் நிலையில் இலங்கையும் தயாரிப்பை ஏற்கவில்லை என கூறிவருகின்றது.
இந்நிலையில் இரு தரப்பினருக்கும் நட்டம் ஏற்படாத வகையில் இலங்கை எவ்வாறு பணம் செலுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி, 20,000 மெற்றிக் தொன் உரங்களை ஏற்றிக்கொண்டு ஹிப்போ ஸ்பிரிட் கப்பல் சீனாவின் கிங்டாவ் துறைமுகத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டது.
ஆனால் இந்த உரத்தின் மாதிரிகளில் தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதை அடுத்து கப்பல் சிங்கப்பூருக்கு திருப்பி விடப்பட்டது.
சீனாவுக்குத் திரும்பாத ஹிப்போ ஸ்பிரிட் கப்பல், கொழும்பு துறைமுகத்துக்குச் செல்வதாக அறிவித்து சிங்கப்பூருக்கு புறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடன் கடிதம் மற்றும் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒப்பந்தங்களின்படி பணம் செலுத்தத் தவறியதற்காக இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்தின் பொருளாதார மற்றும் வணிக அலுவலகத்தால் இலங்கை மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டது.
எவ்வாறாயினும், கேள்விக்குரிய வர்த்தக பரிவர்த்தனை தொடர்பாக இலங்கையின் வர்த்தக உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தடை உத்தரவுக்கு கட்டுப்பட்டதாக மக்கள் வங்கி கூறிய நிலையில் பணம் செலுத்துவதும் தடுக்கப்பட்டது.