தொழிலதிபர் திருக்குமார் நடேசன் மற்றும் அவரது மனைவி நிருபமா ராஜபக்ஷ தொடர்பான பண்டோரா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு அவர்கள் பணத்தை மாற்றியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க நேற்று (திங்கட்கிழமை) இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தனது மகனுடன் இந்த மாதம் சிங்கப்பூரில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தங்கி இருந்து பணத்தை மாற்றுவதற்காக பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகளுடன் திருக்குமார் நடேசன் சந்திப்புகளை நடத்தினர் என அவர் குற்றம் சாட்டினார்.
குறித்த விடுதிக்கு ஒரு நாளைக்கு 8,500 சுவிஸ் பிராங்குகள் தேவைப்படுகின்ற நிலையில் பார்வையாளர்கள் அனுமதியுடன் ஒரு நாளைக்கு 12,000 சுவிஸ் பிராங்குகள் செலவாகும் என்றும் இவர்கள் 15 நாட்கள் அங்கு தங்கி இருந்தார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு இலங்கையில் தனிநபர்களால் திருடப்பட்டதாக கூறப்படும் பணத்தை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவந்து பொது சேவைக்கு பயன்படுத்த வேண்டும் என வசந்த சமரசிங்க கேட்டுக்கொண்டார்.
வெளிநாடுகளில் அந்தத் தனியார் வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை நாட்டுக்கு அனுப்பக் கோரும் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என்றும் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
பிரபல செல்வந்தர்களின் இரகசிய கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பண்டோரா ஆவணத்தில் வெளிக்கொணரப்பட்ட இலங்கையர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி விசாரணையை தொடங்குமாறு ஜனாதிபதி ஒக்டோபர் 6 ஆம் திகதி அறிவித்தார்.
இதனை அடுத்து இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவிற்கு ஜனாதிபதி செயலகத்தின் சட்ட விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமும் சட்டத்தரணியுமான ஹரிகுப்த ரோஹணதீர கடிதம் எழுதியிருந்தார்.
அதில் ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற்குள் இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டிருந்தபோதும் அந்தக் கடிதத்தில் நிருபமா ராஜபக்ஷவினதோ அல்லது நடேசனினதோ பெயர் குறிப்பிடப்படவில்லை.
எவ்வாறாயினும், கால அவகாசம் இருந்த போதிலும், நவம்பர் 8 ஆம் திகதி இடைக்கால அறிக்கை வழங்கப்பட்ட நிலையில், விசாரணை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் செயலாளர் அப்சரா கல்தேரா தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு, தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பொது நிதியைப் பயன்படுத்தி மல்வானையில் வில்லா ஒன்றைக் கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டது,. இந்தச் சம்பவம் தொடர்பாக நடேசன் மீதும் முறைகேடு தொடர்பாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது
இருப்பினும் இருவரும் எந்த தவறும் செய்யவில்லை என மறுப்பு தெரிவித்துவருகின்ற போதும் தற்போதும் வழக்கு நீதிமன்றில் உள்ளது.
பண்டோரா ஆவணத்தில் வெளிக்கொணரப்பட்ட விடயங்கள் குறித்து முன்னாள் அமைச்சர் நிரூபமா ராஜபஷ டிசம்பர் முதலாம் திகதி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார்.
நடேசன் இதுவரை இரண்டு முறை சாட்சியம் வழங்கியுள்ள நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் இந்த விடயம் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கப்படமாட்டார்கள் என இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.