வவுனியா- கள்ளிக்குளம், சிதம்பரம் பகுதியை சேர்ந்த மக்கள், தமது அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு வவுனியா பிரதேச செயலாளருக்கு மகஜர் கையளித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள், இந்த கிராமத்தில் இருந்து பிரதான வீதிக்கு செல்லும் 10 கிலோ மீற்றர் நீளமான வீதி, நீண்டகாலமாக புனரமைக்கப்படாததுடன் குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது.
தற்போது மழையுடனான காலநிலை நிலவிவருகின்றமையால், அந்த வீதியினை பயன்படுத்தும் கிராமமக்கள் பல்வேறு அசௌகரியங்களிற்கு மத்தியிலேயே தமது பயணத்தை தொடர்கின்றனர்.
பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் முதல் வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள் வரை அனைவரும் சொல்லொணாத்துன்பங்களுடனேயே தமது பயணத்தை தொடர்கின்றனர்.
இதேவேளை எமது கிராமத்துக்கு பேருந்துச் சேவையும் நீண்டகாலமாக இல்லாத நிலமை காணப்படுகின்றது. கூலித்தொழிலை நம்பி வாழ்க்கை நடாத்தும் நாம், நகருக்கு செல்லவேண்டுமானால் 1000 தொடக்கம் 1500 ரூபாய் வரையான பணத்தினை முச்சக்கரவண்டிக்கு வழங்கியே சென்று வருகின்றோம்.
எனவே, எமது நிலைமையை உணர்ந்து உரிய அதிகாரிகள் வீதியை சீரமைப்பதுடன், பேருந்துச் சேவையினையும் ஏற்ப்படுத்தி தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் அவர்களது கோரிக்கையினை பரிசீலித்த உதவிப்பிரதேச செயலாளர் ச.பிரியதர்சினி அடுத்த வருடம் வகுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்களில் குறித்த கிராமத்தின் வீதியினை திருத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்ததுடன், பேருந்துச்சேவை குறித்து அதனுடன் தொடர்புடைய திணைக்களத்துடன் கலந்துரையாடுவதாக தெரிவித்தார்.