நாடு கடத்தப்பட்ட ஆன்மீகத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசுவாசத்தை வெளிப்படுத்தியதாக அறியப்பட்ட திபெத்திய எழுத்தாளரும் கல்வியாளருமான கோ ஷெராப் கியாட்சோவுக்கு, திபெத்திலுள்ள சீன நீதிமன்றம் 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளதாக ரேடியோ ஃப்ரீ ஆசியா (RFA) தெரிவிக்கிறது.
இதற்கு முன்னதாக கோ ஷெராப் கியாட்சோ, சீன ஆட்சியின் கீழ் வாழும் திபெத்தியர்கள் மீதான கட்டுப்பாடுகளை விவரிக்கும் புத்தகங்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
மேலும், சிச்சுவானின் நகாபாவில் (சீன மொழியில், அபா) திபெத்திய தன்னாட்சி மாகாணத்திலுள்ள கிர்தி மடாலயத்தை சேர்ந்த 46 வயதான துறவி கோ ஷெராப் கியாட்சோ, ஒக்டோபர் 26, 2020 அன்று, சிச்சுவானின் தலைநகர் செங்டுவில் மாநில பாதுகாப்பு முகவர்களினால், அறியப்படாத குற்றச்சாட்டின் பேரில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.
இதற்கிடையில், கியாட்சோ விரைவில் திபெத்தின் பிராந்திய தலைநகரான லாசாவுக்கு அருகிலுள்ள சிறைக்கு மாற்றப்படுவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் அவர் எந்த குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்டார் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என ரேடியோ ஃப்ரீ ஆசியா கூறியுள்ளது.
மேலும் புலம்பெயர்ந்து வாழும் திபெத்திய அறிஞர் ஒருவர் ரேடியோ ஃப்ரீ ஆசியாவுக்கு கூறியுள்ளதாவது, “சீன ஆட்சியின் கீழ் கருத்துச் சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகளை விவரிக்கும் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதிய கியாட்சோ, திபெத்திய மொழி, மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்க வாதிடும் திறந்த மனதுடைய நபர்.
அத்துடன் அவரது 10 ஆண்டுகால சிறைத்தண்டனையைப் பற்றி கேள்விப்படுவது வருத்தமான செய்தி. இந்த விடயத்தை உடனடியாக கவனிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை, உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தை நான் அழைக்க விரும்புகிறேன்”என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இதற்கு முன்னதாக கடந்த ஒக்டோபரில், கியாட்சோவின் வழக்கைப் பற்றிக் கேட்டு ஐ.நா மனித உரிமை நிபுணர்கள் அனுப்பிய ஜூலை 16 கடிதத்திற்கு, சீன அரசாங்கம் பதிலளித்துள்ளதாவது, பிரிவினையைத் தூண்டும் சந்தேகத்தின் பேரில், கியாட்சோ குற்றவியல் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று அவர்களிடம் கூறியது.