பிக் பேஷ் ரி-20 தொடரின் 11ஆவது லீக் போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
குயிண்ஸ்லேண்ட் மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில், பிரிஸ்பேன் ஹீட் அணியும் மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியும் மோதின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பிரிஸ்பேன் ஹீட் அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, மெக்கென்ஸி ஹார்வீ ஆட்டமிழக்காது 71 ஓட்டங்களையும் மெடின்ஸன் 19 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், பெஸ்லீ 3 விக்கெட்டுகளையும் சேவியர் பார்ட்லெட், லியம் குத்ரி மற்றும் ஸ்வெப்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 141 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய பிரிஸ்பேன் ஹீட் அணி, 16.5 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால், பிரிஸ்பேன் ஹீட் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, சேம் ஹீஸ்லெட் ஆட்டமிழக்காது 44 ஓட்டங்களையும் கிறிஸ் லின் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மெல்பேர்ன் ரெனிகேட்ஸ் அணியின் பந்துவீச்சில், சஹீர்கான் 2 விக்கெட்டுகளையும் கேன் ரிச்சட்சன், மொஹமட் நபி மற்றும் ஜெக் பிரிஸ்ட்விட்ஜ் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக, பிரிஸ்பேன் ஹீட் அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பெஸ்லீ தெரிவுசெய்யப்பட்டார்.