நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கடந்த சில தினங்களுககு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த விவாதத்தினை ஒழுங்கமைத்து பொதுவெளியில் நடாத்தும் நோக்கில் குறித்த இருவருடனும் பேசுவதற்கு ஆதவனின் செய்திப்பிரிவு முயற்சித்தது.
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டினை நாம் தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனை தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டு விவாதத்திற்கு தயாரா என கேள்வி எழுப்பியிருந்தோம்.
அதற்கு பதில்வழங்கிய இரா.சாணக்கியன், நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், அவரை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் என குறிப்பிட்டார்.
பகிரங்க வெளியில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்ததன் பின்னர், நசீர் அஹமட் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுப்பது ஏன்?