சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் காரணமாக பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளை இராஜதந்திர புறக்கணிப்பாக அறிவித்ததில் அமெரிக்காவுடன் அவுஸ்திரேலியாவும் இணைந்துள்ளது.
பெய்ஜிங்கில் 2022 குளிர்கால ஒலிம்பிக்கிற்கு அதிகாரப்பூர்வ அமெரிக்க தூதுக்குழுவை அனுப்புவதில்லை என்ற முடிவை பிடன் நிர்வாகம் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவுஸ்திரேலியா இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.
சீனாவுடனான உறவு முறிவைக் காரணம் காட்டி, அவர்களது தூதுவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் நிகழ்வைப் புறக்கணிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியதாக அந்நாட்டு ஒலிபரப்புக் கழகம் (ஏ.பி.சி) தெரிவித்துள்ளது.
மேலும் அவுஸ்திரேலியாவின் தேசிய நலன் கருதியே இதனை செய்வதாகவும் பிரதமர் ஸ்காட் மோரிசன் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியா மீதான பெய்ஜிங்கின் சொந்த இராஜதந்திர முடக்கம், சீனத் தலைவர்களிடம் நேரடியாக மனித உரிமைகள் குறித்த தனது கவலைகளை தெரிவிக்க முடியாததால், விளையாட்டுப் போட்டிகளைப் புறக்கணிக்கும் அதிகாரிகளின் முடிவிற்கு ஊட்டமளித்ததாக மோரிசன் கூறியுள்ளார்.
இதேவேளை அண்மையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி, அமெரிக்க விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்பார்கள். ஆனால் நிர்வாகம், அரசாங்க அதிகாரிகளை விளையாட்டுகளுக்கு அனுப்பாது என்று கூறினார்.
இந்த நடவடிக்கை, ஜின்ஜியாங்கில், குறிப்பாக உய்குர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக, கட்டாய உழைப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றிய அறிக்கைகள் தொடர்பாக, சீனா மீது அமெரிக்கா அழுத்தத்தை அதிகரிப்பதைக் குறிக்கிறது என சி.என்.என் செய்தி அறிக்கை குறிப்பிடுகிறது.
மேலும் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற மாநாட்டு நிகழ்வொன்றில், சீனாவில் மனித உரிமை மீறல்கள் வழக்கம் போல் இடம்பெறுவதனை அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா ஒரு தெளிவான செய்தியை அனுப்ப விரும்புவதாக சாகி கூறியுள்ளார்.
இதற்கிடையில், பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 2022 இராஜதந்திர புறக்கணிப்பு குறித்த அமெரிக்க அரசாங்கத்தின் முடிவை முழுமையாக மதிப்பதாக சர்வதேச ஒலிம்பிக் சபை (IOC) தெரிவித்துள்ளது.
அரசு அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகளின் இருப்பு ஒவ்வொரு அரசாங்கத்திற்கும் முற்றிலும் அரசியல் முடிவாகும், IOC அதன் அரசியல் நடுநிலைமையை முழுமையாக மதிக்கிறது. அதே நேரத்தில், ஒலிம்பிக் போட்டிகளும், விளையாட்டு வீரர்களின் பங்கேற்பும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை என்பதையும் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம் என ஐ.ஓ.சி, தனது அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.