தமிழ் பேசும் கட்சிகளின் ஒருமித்த தீர்வு யோசனைகள் சிங்கள மக்களை சீண்டுவதாகவோ, மிரட்டுவதாகவோ அமையக் கூடாது என இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தெரிவித்தார்.
இந்த பேச்சுவார்த்தைகள் வரவேற்கத்தக்க மிக முக்கியமான அரசியல் முன்னெடுப்பு என்றாலும் மிகவும் கவனமாக விடயங்கள் கையாளப்பட வேண்டும் என தெரிவித்தார்.
தமிழ் பேசும் கட்சிகளால் எட்டப்படும் ஒருமித்த யோசனைகள், இலங்கைக்கும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்துக்கும் கையளிக்கப்படவுள்ளன.
எனவே பிரிவினை, தீவிரவாதம் ஆகியவற்றை தூண்டாத வகையில் எட்டப்படும் இத்தீர்வு யோசனைகள் குறித்து சிங்கள மக்களுக்கு தெளிவூட்ட வேண்டும் என்றும் வரதராஜப் பெருமாள் கேட்டுக்கொண்டார்.
குறிப்பாக ஒற்றையாட்சி முறைமைக்கு விரோதமாக தமிழர் தரப்பால் கருத்துக்கள் பகிரப்பட்டால், அது சிங்கள பௌத்த கடும்போக்காளர்களை குழப்பிவிடும் என வரதராஜப் பெருமாள் சுட்டிக்காட்டினார்.
இருக்கின்ற அரசியல் நிலைமைகளை குழப்பிக் கொள்ளாமல், இராஜதந்திர ரீதியில் காய் நகர்த்த வேண்டும் என குறிப்பிட்டார்.
இதேவேளை இந்தக் கூட்டணிக்கு வெளியில் நிற்பவர்கள் ஏன் இதனைக் குழப்ப முயற்சி செய்கின்றார்கள் என்றும் வரதராஜப் பெருமாள் கேள்வியெழுப்பினார்.