கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய தேவை இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன
இது தொடர்பாக இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பியபோதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அண்மையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தின்போது, சம்பந்தப்பட்ட சட்ட பிரதியை காண்பித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அதில் கூறப்பட்டிருந்த சட்ட ஏற்பாடுகளை தெளிவுபடுத்துமாறு என்னிடம் கேட்டுக்கொண்டார்.
கடலட்டைப் பண்ணைகளை அமைக்கும் செயற்பாடுகளின்போது, பிரதேச சபைகளின் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளத் தேவையில்லை என்பது உண்மை. ஆனால் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என சட்டத்தில் உள்ளதை அவருக்கு கூறினேன்.
ஆனால் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என நான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளார்கள். அது அரை உண்மையே ஆகும்.
சட்டத்தின்படி கருத்தைப் பெறுவதென்பது அந்த கருத்துக்களை உள்வாங்கி செயற்படுத்துவதே ஆகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.