சமுர்த்தி திட்டங்களை உச்சபட்சம் பயன்படுத்தி நீர்வேளாண்மையில் ஈடுபடுவதன் மூலம் கடற்றொழில் சார் மக்களுக்கு நிலையான பொருளாதாரத்தினை ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் போது, முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட கரைவலை தொழிலில் ஈடுகின்றவர்களின் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய கடற்றொழில் அமைச்சர், கரைவலை தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்ததுடன், அவை தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அதனைத் தொடர்ந்து, நந்திக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி உயிரிழந்த ஜெ. செலஸ்ரன் என்பவரின் மனைவி(5 இலட்சம் ரூபாய்) மற்றும் 2 பிள்ளைகளுக்கான(தலா 250,000 ரூபாய்) நஸ்ட ஈட்டு தொகையாக கடற்றொழில் அமைச்சினால் ஒதுக்கப்படட சுமார் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலைகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்.
அதேபோன்று, நாடளாவிய ரீதியில் இரண்டு இலட்சம் சமூர்த்தி பயனாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுவூட்டும் திட்டத்திற்கு அமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் கொடுவா மீன் வளர்ப்பில் ஈடுபடுவதற்கு தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு தலா 250,000 ரூபாய் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்ட காசோலைகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதன்போது கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், “நலிவுற்ற மக்களின் வாழ்கை தரத்தினை முன்னேற்றுவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சமுர்த்தி திட்டங்கள், பாராபட்சமின்றி நாட்டின் அனைத்து பாகங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றதன.
இதன் ஊடாக சுமார் ஐம்பது இலட்சம் வரையிலான கடன் வசதிகள் உட்பட பல்வேறு நன்மைகளை சமுர்த்திப் பயனாளர்கள் பெற்றுக் கொள்ள முடியும். அதேபோன்று கிராமிய அபிவிருத்தி வங்கியின் ஊடாக சுமார் 250 இலட்சம் வரையிலான கடனைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எனவே, இந்த வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்தி, பருவ கால மீன் வளர்ப்பு, நன்னீர் மீன் வளர்ப்பு, கொடுவா மீன் வளர்ப்பு மற்றும் இறால், நண்டு, கடலட்டை ஆகியவற்றுக்கான பண்ணைகளை அமைத்தல் போன்ற நீர்வேளாண்மையில் முடிந்தளவு ஈடுபடுவதன் மூலம் நிலைபேறான பொருளாதாரக் கட்டமைப்பினை எமது மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுக் கொள்ள முடியும்.
இதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் பூரணமான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.“ எனக் குறிப்பிட்டார்.