ஹப்புத்தலை தோட்ட தொழிலாளர்கள் இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்பு செயலாளருமான செந்தில் தொண்டமானை சந்திப்பதற்கு நேரம் கோரியதோடு, தொழிலாளர்களின் ஒப்புதல் இன்றி நிர்வாகத்தால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய உற்பத்தி விதிமுறைளுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளனர்.
வழக்கமான நடைமுறையை விட அதிக சுமை தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதாகவும் புதிய உற்பத்தி திறனுக்கான அளவு என்பது ஒரு சாதாரண தொழிலாளியின் வேலைத்திறனையும் விட அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.
தேயிலை தோட்டத்தின் தற்போதைய சூழ்நிலை அடிப்படையில் வழமைப் போல் வழங்கப்படும் கொளுந்து அளவுக்கு அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானியிலுள்ள அடிப்படை சம்பளத்தில் அரைவாசி கூட வழங்கப்படுவதில்லை.
இந்த தகவல் செந்தில் தொண்டமானுக்கு வழங்கப்பட்டத்தை அடுத்து தொழிலாளர்களைத் சந்திப்பதற்கு தேயிலை தோட்டத்திற்கு நேரடியான விஜயம் மேற்கொண்டு, தேயிலை தோட்டங்களை ஆய்வு செய்ததுடன், தொழிலாளர்களுடன் இது சம்பந்தமான கலந்துரையாடல் மேற்கொண்டார்.
தொழிலாளர்கள் மீதான இவ்வாறான அணுகுமுறை தொடருமானால் நிர்வாகத்திற்கு எதிராக மிகக் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படும் என நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.