சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை மூடும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி வலியுறுத்தியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸுக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார்.
சைப்ரஸில் பணிபுரிந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாங்கள் பங்களித்த சைப்ரஸ் சமூக பாதுகாப்பு நிதியை கோருவதில் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர் என அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
சில இலங்கையர்களால் அந்நாட்டில் உள்ள சட்டங்கள் காரணமாக சுமார் 5 முதல் 6 மில்லியன் வரை பெற முடியவில்லை என்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இந்த விவகாரத்தில் இராஜதந்திர தலையீட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும் தூதரகத்தை மூடுவது தற்போது தடையாக இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இன்னும் அங்கு பணிபுரியும் இலங்கையர்களும் இராஜதந்திர பணிகளைத் தேடிச் செல்வதற்கு வழியின்றி நிர்க்கதிக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர உறவுகள் இன்றியமையாதது மற்றும் பெருமளவிலான இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் இராஜதந்திர பணிகளை முடக்குவது நியாயமானதல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சைப்ரஸில் உள்ள துணைத் தூதரகத்தை மூடுவது அல்லது சைப்ரஸ் சமூக பாதுகாப்பு நிதி தொடர்பான விடயங்களைக் கையாளக்கூடிய ஒரு அதிகாரியை வெளிவிவகார அமைச்சகம் நியமிக்கும் முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
டாலர் நெருக்கடி காரணமாக சைப்ரஸ், நைஜீரியா மற்றும் பிராங்பேர்ட்டில் உள்ள மூன்று வெளிநாட்டு தூதரகங்களை அரசாங்கம் மூடவேண்டியுள்ளமை வருத்தமளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.