டெல்டா மற்றும் ஒமிக்ரோன் திரிபுகள் ஒன்று சேர்ந்து, ஆபத்தான வகையில், கொவிட்-19 பேரலையை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானோம் கெப்ரேசேயஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் புதிய பாதிப்புகள் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், டெட் ரோஸ் அதானோம் கெப்ரேசேயஸின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இது சோர்வுற்ற சுகாதார பணியாளர்களையும், சரிவின் விளிம்பில் உள்ள சுகாதார அமைப்புகள் மீதும் பெரும் அழுத்தத்தை தொடர்ந்து ஏற்படுத்திக்கொண்டே இருக்கிறது.
பணக்கார நாடுகளின் பெரிய அளவிலான பூஸ்டர் டோஸ்கள் தொற்றுநோயை நீடிக்க செய்ய வாய்ப்புள்ளது. ஏனெனில், அவை ஏழை மற்றும் குறைவாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் உள்ள நாடுகளிலிருந்து விநியோகங்களைத் திசை திரும்புகின்றன. இது வைரஸ் பரவுவதற்கும், பிறழ்வதற்கும் அதிக வாய்ப்பை அளிக்கும்.
2022ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலகில் உள்ள 70 சதவீத பேர் தடுப்பூசி செல்லுத்திக்கொள்ளும் விழிப்புணர்வை அனைவரும் புத்தாண்டு தீர்மானமாக எடுக்க கொள்ள வேண்டும்’ என கூறினார்.
உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் 900,000 புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இதனிடையே ஏறக்குறைய 100 நாடுகள் தங்கள் மக்கள் தொகையில் 40 சதவீத பேருக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை இன்னும் அடையவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பு செவ்வாய்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 26ஆம் திகதிக்கு முந்தைய வாரத்தில் ஐரோப்பாவில் அனைத்து திரிபுகளின், புதிய கொவிட் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 57 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மேலும், அமெரிக்காவில் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.