ஒமிக்ரோன் பிறழ்வு கொவிட்டின் டெல்டா பிறழ்வை இல்லாதொழிக்கும் திறன் கொண்டுள்ளதாக, தென்னாபிரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய பிறழ்வானது டெல்டா தாக்கத்திற்கு எதிர்வினையான நோயெதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே, ஒமிக்ரோன் பிறழ்வு டெல்டாவின் பரவுகையை குறைக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்ற நிலையில், இந்த விடயத்தை உறுதி செய்வதற்கு மேலும் ஆதாரங்கள் தேவை என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று 2019ஆம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் வேகமாக உலகநாடுகளுக்கு பரவிய கொவிட் தொற்று, ஆறுமாத காலத்திற்கு பிறகு ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இதன்பிறகு திடீரென உருமாற்றம் அடைந்த கொரோனா, அல்பா, பீட்டா, காமா, டெல்டா என உருமாற்றம் அடைந்தது.
இதில் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றுக்கு டெல்டா எனப் பெயரிடப்பட்டது.
இந்த வைரஸ் மற்ற உருமாற்றம் அடைந்த வைரஸ் தொற்றுகளை விட வீரியம் மிக்கதாக இருந்ததால், உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு வளர்ந்த நாடுகள், வளர்ந்து வரும் நாடுகள் தடுப்பூசிகளை செலுத்தும் பணியை துரிதப்படுத்தியது.
மே மாதத்திற்கு பிறகு ஓரளவு கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனா வைரஸ் தொற்றின் வீரியம் குறைந்து அப்படியே மறைந்து விடும் என மக்கள் நினைத்தனர்.
அந்த நிலையில்தான் கடந்த மாதம் தென்னாபிரிக்காவில் ஒமிக்ரோன் என்ற உருமாற்றம் வைரஸ் கண்டறியப்பட்டது.
அதோடு மட்டுமல்லாமல் இந்த வைரஸ் டெல்டாவை விட வீரியம் மிக்கது, பரவும் தன்மை அதிகம், தடுப்பூசிகளின் செயல்திறனை குறைக்கிறது என ஆய்வில் தெரியவந்தது.