அபிஷேக் ஷர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அபாரமான அரைசதங்களால் கவுகாத்தியில் நேற்றிரவு (25) நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலமாக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா தக்க வைத்துக் கொண்டது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீச்சினை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை பெற்றது.
அணி சார்பில் அதிகபடியாக க்ளென் பிலிப்ஸ் 48 ஓட்டங்களையும், மார்க் சாப்மேன் 32 ஓட்டங்களையும் பெற்றனர்.
இந்திய அணி சார்பில் ஜஸ்பிரித் பும்ரா (3/17) மூன்று விக்கெட்டுகளுடன் சிறந்ததொரு பந்துப் பரிமாற்றத்தை மேற்கொண்டார்.
அதே நேரத்தில் ஹர்திக் பாண்டியா (2/23), சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் (2/18) மற்றும் ஹர்ஷித் ராணா (1/35) ஆகியோரும் நேர்தியாகப் பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டனர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 20 பந்துகளில் 68 ஓட்டங்களையும், அணித் தலைவர் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ஓட்டங்களையும் எடுத்து10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களை எட்ட உதவியது.
அது மாத்திரமின்றி 2 விக்கெட்டுகள் மற்றும் 60 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலகுவான வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.
தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், இந்த வெற்றியுடன் இந்தியா தொடரை 3-0 என்ற கணக்கில் தக்கவைத்துள்ளது.
அத்துடன் இந்திய அணியின் இந்தி அதிரடி வெற்றியானது 2026 டி20 உலகக் கிண்ணத்துக்கு இன்னும் மூன்று வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஏனைய அணிகளுக்கு ஒரு வலுவான செய்தியையும் வெளிக்காட்டியது.

அபிஷேக் ஷர்மா சாதனை
போட்டியில் அபிஷேக் ஷர்மா வெறும் 14 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார்.
இதன் மூலும், ஹார்டிக் பாண்டியாவின் முந்தைய 16 பந்துகளில் (2025) அரைசதத்தை முறியடித்து, டி20யில் வேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது இந்தியர் ஆனார்.
இப்போது அவர் தனது வழிகாட்டியான யுவராஜ் சிங்கிற்கு அடுத்தபடியாக உள்ளார்.
யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்து அனைத்து நேர இந்திய சாதனையையும் வைத்திருக்கிறார்.














